1. Home
  2. தமிழ்நாடு

இளைய ராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்..!

1

இளையராஜாவின் பாராட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ” ராஜா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா.. நேற்று இல்லை.. நாளை இல்லை.. எப்பவும் நீ ராஜா.. என்ற இளையராஜாவின் பாடல் மூலம் தன் பேச்சை தொடங்கினார். இசை எனும் தேனை உலகத்திற்கு தரும் இந்த தேனிக்காரரை பாராட்ட புகழ நாம் எல்லோரும் கூடியிருக்கிறோம். நம்முடைய இசைஞானி கலைத் தாய்க்கு மட்டும் சொந்தமானவர் அல்ல.. தமிழ் தாய்க்கும் சொந்தமானவர்..

அதனால் தான் தமிழக அரசு சார்பில் அவரை கொண்டாடும் வகையில் இந்த பாராட்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். பாராட்டு என்பது ராஜாவிற்கு புதுசா.. கிடையாது.. இசைஞானியை பாராட்டுவதில் நாம் தான் பெருமை அடைகிறோம். இசைஞானி இளையராஜா தனது திரையுலக பயணத்தை தொடங்கி 50 ஆண்டுகள் நடைபெறுகிறது. நம்முடைய இதயங்களை ஆளத் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் ஆகிறது. சிம்பொனி சிகரம் தொட்ட தமிழர் இளையராஜாவிற்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பில் உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்டு திறமையும்,உழைப்பும் இருந்தால் எப்பேர்ப்பட்ட உயரங்களையும் அடையலாம் என எல்லா மனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக இந்த மனிதர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த அரை நூற்றாண்டு காலத்தில் ராஜாவின் பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. ராஜாவின் பாடல்களை மனதில் ஏற்றி தங்களுடைய இன்ப, துன்பங்களை பொருத்திப் பார்க்காத மனிதர்களே இருக்க முடியாது.

இளையராஜாவின் இசை தாயாக தாலாட்டுகிறது.. காதலின் உணர்வுகளை போற்றுகிறது.. வெற்றி பயணத்திற்கு ஊக்கமளிக்கிறது.. வலிகளை ஆற்றுகிறது உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால் இவர் இளையராஜா மட்டுமல்ல.. இணையற்ற ராஜா.. ஒரு ராஜா இருந்தால் அவருக்கென்று நாடு இருக்கும் மக்கள் இருப்பார்கள்.. எல்லைகள் இருக்கும்.. ஆனால் இந்த ராஜா மொழிகளைக் கடந்தவர்.. நாடுகளைக் கடந்தவர்.. எல்லைகளைக் கடந்தவர்.. எல்லா மக்களுக்குமானவர்.. திரையிசையைக் கடந்த இளையராஜா அவர்களின் இசை அவரது திறனை, வீச்சை, ஆற்றலை, ஆழத்தை, உயரத்தை எடுத்துச் சொல்லும். இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் திருக்குறளும், நற்றிணையும், புறநானூறும், குறுந்தொகையும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், பரிபாடலும், சிலப்பதிகாரமும் எங்களுக்கு மனப்பாடம் ஆகி இருக்கும் என ஒருவர் இசைஞானியை பற்றி சோசியல் மீடியாவில் எழுதி இருந்தார்.

நானும் இதையே தான் தமிழ் ஆர்வலராக உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். சங்கத் தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு நீங்கள் இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிட வேண்டும். எப்போதும் முதலமைச்சரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள். முதலமைச்சராக இருக்கும் நான் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் தமிழர்களின் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

Trending News

Latest News

You May Like