மக்களே உஷார்..! இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 24 மணி நேரத்தில் இது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்து தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி நிலவும். இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் (நவ.14) கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.
இதேபோல் கனமழை காரணமாக கடலூரிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.