1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! சென்னையில் இதுவரை விதிமீறல்களில் ஈடுபட்ட 12,300 பேரின் லைசென்ஸ் முடக்கம்..!

1

சென்னை மாநகர சாலைகளில் சிக்னலை மீறிச் செல்பவர்கள், சிக்னல் போடப்பட்டிருக்கும்போது நிறுத்தக் கோட்டை (ஸ்டாப் லைன்) தாண்டி வாகனங்களை நிறுத்துபவர்கள், மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும், விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸார் மீண்டும் மீண்டும் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து வருகிறார்கள்.இதை மீறி போக்குவரத்து விதிமீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோர், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோரின் லைசென்ஸை முடக்கிவைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸார் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து லைசென்ஸை முடக்கி வைக்க பரிந்துரை செய்து வருகிறார்கள்.இதுதொடர்பாக கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரையில் 12,300 பேரின் லைசென்ஸ் முடக்கப்பட்டுள்ளது.இப்படி முடக்கி வைக்கப்படும் லைசென்ஸ்கள் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையில் செயல்படாதவை என்கிற அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதனால் இந்த கால கட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை மீறி லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிக்னலை மீறி சென்றது தொடர்பாக கடந்த ஆண்டு 3,500 பேரின் லைசென்ஸ் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் 1,362 பேரின் லைசென்ஸை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். வேகமாக வாகனங்களை ஓட்டிய 2,384 பேரின் லைசென்சும் முடக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு 1,500 பேரும், இந்த ஆண்டு இதுவரை 550 பேரும் சிக்கியுள்ளனர். அதிக பாரங்களை ஏற்றிச் சென்றதற்காக 1,500 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியதற்காக 1,130 பேரின் லைசென்ஸும், போதையில் வாகனம் ஓட்டிய 1,400 பேரின் லைசென்ஸும் முடக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் இந்த நடவடிக்கை தொடரும் என்றும், எனவே போக்குவரத்து விதிமீறலில் பொது மக்கள் ஈடுபட வேண்டாம் என்றும் போக்குவரத்து போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like