மக்களே உஷார்..! இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு பருவமழையால் மிகவும் மோசமான பாதிப்புகளை வடமாநிலங்கள் எதிர்கொண்டுள்ளன. தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (18.08.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19.08.2023 முதல் 23.08.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
இன்று (18.08.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.