மக்களே உஷார்..! போக்குவரத்து போலீசார் போல் போலி அபராத ரசீதுகளை அனுப்பும் மோசடி கும்பல்..!
இருசக்கர வாகன ஓட்டிகளின் லைசென்ஸ், வாகனங்களுக்கு ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சோதிப்பது போக்குவரத்து போலீசார் வழக்கம்.மேலும் ஏதாவது விதிமீறல் குற்றம் இருந்தால் 'பரிவாஹன்' செயலி மூலம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக 'பரிவாஹன்'செயலி என https://echallanparivahan.in/ என்ற போலியான முகவரி மூலம் பொது மக்களின் அலைபேசிகளுக்கு எஸ்.எம்.எஸ்.கள் வருவதாகவும், இவ்வாறு வரும் எஸ்.எம்.எஸ்.களை ஓப்பன் செய்து, 'லிங்க்'கை 'கிளிக்' செய்யும் வாகன உரிமையாளர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் பறிபோவது தொடர்கிறது.
இதனால் போக்குவரத்து போலீசார் முன் எச்சரிக்கையாக https://echallan.parivahan.gov.in/ என்ற முகவரியில் இருந்து மட்டுமே 'லிங்க்' வரும் எஸ்.எம்.எஸ்.,களை கிளிக் செய்ய வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், போலி முகவரியில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ்., ஓப்பன் செய்ய வேண்டாம். அவ்வாறு கிளிக் செய்தால் பணம் பறிபோய் விடும். பொது மக்கள், வாகன டிரைவர்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.