வாகன ஓட்டிகளே உஷார்..! நாளை மறுநாள் முதல் வாகனங்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு..!
சென்னை பெருநகர காவல் எல்லையில் நவம்பர் 4-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான புதிய வேக கட்டுப்பாடு அமல்படுத்ததப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் ஆட்டோக்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ வேகம் செல்லலாம். இரு சக்கர 50 கி.மீ வேகம் வரை செல்லலாம். மேலும் இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகம் வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகம் வரை மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ. வேகத்தை மீறியும் இயக்கப்படும் வாகனங்கள் 'ஸ்பீட் ரேடார் கன்' மூலம் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தது. இதன் மூலம் விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றும் காவல்துறை விளக்கமளித்துள்ளது. இதற்காக சென்னையில் 10 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளும், 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்தவும் நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் 277 சிக்னல்கள் இருக்கின்றன. இந்த பெருநகரத்தில் 62.5 லட்சம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயணிக்கின்றன. ஒவ்வொரு சிக்னல்களிலும் சரியான வழிக்காட்டுதல்கள் இருந்த போதிலும், சிலர் இதை மீறுகின்றனர். வாகனத்தின் வேகத்தை குறைக்க அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை முறையாக பின்பற்றினாலே விபத்துக்கள் நடப்பதை தவிர்க்க முடியும். ஆனால் இது பின்பற்றப்படாததால்தான் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவேதான் இந்த வேக கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.