1. Home
  2. தமிழ்நாடு

காட்டிக் கொடுத்த கையெழுத்து : கம்பி எண்ணும் தம்பதி..!

காட்டிக் கொடுத்த கையெழுத்து : கம்பி எண்ணும் தம்பதி..!


சென்னையை அடுத்த பொழிச்சலூர் சிவசங்கர் நகர் தண்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரை (38). இவர் மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்து வருகிறார். கடந்த மாதம் 2ம் தேதி, விழுப்புரத்தில் உள்ள துரையின் தாய் இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளது.

இதையடுத்து துரை, வீட்டைப் பூட்டி பக்கத்து வீட்டில் வசிக்கும் நந்தினி (28) என்பவரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு விழுப்புரம் சென்றுள்ளார். ஊரடங்கு காரணமாக ஒரு மாதம் கழித்து கடந்த 7ம் தேதி வீட்டுக்கு வந்துள்ளார் துரை. அதன்பின்னர், கடைக்குச் செல்வதற்காக பீரோவில் இருந்த பணத்தை எடுப்பதற்கு சென்றபோது, 84 ஆயிரம் ரூபாய், மூன்றே கால் சவரன் தங்க நகை மற்றும் 2 வெள்ளிக் கொலுசுகள் காணாமல் போனது தெரிய வந்தது.

இதுகுறித்து, சங்கர் நகர் குற்றப்பிரிவு போலீசில் துரை அளித்த புகாரில், ”நான் எப்போதும் பணத்தை எண்ணி முதல் நோட்டில் எவ்வளவு தொகை இருக்கிறது என்று எழுதி, கையெழுத்து போடுவது வழக்கம். அதேபோல், 84 ஆயிரம் ரூபாய் கொண்ட கட்டின் முதல் தாளிலும் எவ்வளவு பணம் தொகை என்று குறிப்பிட்டு கையெழுத்து போட்டிருந்தேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், துரை ஊருக்குச் செல்லும்போது சாவியைக் கொடுத்த நந்தினியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வீட்டைத் திறக்கவில்லை எனவும், பணமும் நகையும் காணாமல் போனது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் நந்தினி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொழிச்சலூர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. அங்கு சென்று, நந்தினியின் கணவர் உமா சங்கர் (30) மது வாங்கியுள்ளார். அதே நபரிடம், துரையின் நண்பர் ஒருவரும் மது வாங்கியுள்ளார். அப்போது, மது விற்றவர் கொடுத்த மீதி பணத்தில் ஒரு பத்து ரூபாய் நோட்டில், ‘4,500 ரூபாய்’ என்று குறிப்பிட்டு, துரையின் கையெழுத்து போடப்பட்டிருந்தது

இதுகுறித்து அவர், நண்பர் துரையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து துரை விரைந்து சென்று மது விற்பனை செய்தவரிடம் இதுபற்றி கேட்டபோது, உமாசங்கர் தான் அந்தப் பணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து துரை, சங்கர் நகர் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார். இதன் பேரில் அங்கு சென்ற போலீஸார், நந்தினி மற்றும் ஆட்டோ டிரைவரான அவருடைய கணவர் உமா சங்கர் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து தங்கள் பாணியில் விசாரணை நடத்தியபோது, பணம் மற்றும் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிக் கொலுசு, தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending News

Latest News

You May Like