பெங்களூருவில் பயங்கரம்: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஆத்திரத்தில் மனைவியைச் சுட்டுக்கொன்ற கணவன்!
விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஆத்திரத்தில், தனது மனைவியை நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவனின் செயல் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஷ்வரி (39) தம்பதியினர் கடந்த 2011-ம் ஆண்டு திருமணமானவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்த பாலமுருகன் ஐ.டி நிறுவனத்திலும், மகேஷ்வரி ஒரு தனியார் வங்கியில் துணை மேலாளராகவும் பணியாற்றி வந்தனர்.
பாலமுருகன் தனது வேலையை ராஜினாமா செய்த பிறகு, தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பாலமுருகன், அவரிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மகேஷ்வரி தனது குழந்தைகளுடன் ராஜாஜிநகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். மேலும், தனது கணவரிடம் இருந்து பிரிய முடிவெடுத்து, நீதிமன்றம் மூலம் விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தனக்கு விவாகரத்து நோட்டீஸ் வந்ததால் ஆத்திரமடைந்த பாலமுருகன், மகேஷ்வரி தங்கியிருக்கும் இடத்தை ரகசியமாகக் கண்காணித்து வந்துள்ளார். நேற்று மாலை மகேஷ்வரி பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகேஷ்வரி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், தலைமறைவாக இருந்த பாலமுருகன் போலீஸ் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார். போலீஸார் அவரைக் கைது செய்து, துப்பாக்கி அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்தும், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.