ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்..!
கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரஜ்வாலின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரேவண்ணாவை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அக்ரஹாரா சிறையில் அடைக்கபட்டார். இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமின்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பெண்ணை கடத்திய வழக்கில், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ ஹெச்.டி ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஹெச்.டி. ரேவண்ணா ரூ.5 லட்சம் மதிப்பிலான பிரமாண பத்திரம் தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக்கொள்ள, பெங்களூரு மக்கள் பிரதிநிதி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.