மாட்டுக்கொழுப்பு விவகாரம் : குறைபாட்டை சப்ளை செய்தவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்..!
ஆந்திராவில் ஏழுமலையான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் திருப்பதி லட்டுவில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுதி செய்தது.
இது குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் சுவை உறுதி செய்யப்பட வேண்டும். புனிதத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெளிவாக கூறியுள்ளார். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை உள்ளடக்கியதால், சுத்தமான பசு நெய் பயன்படுத்துவதை உறுதி செய்வோம்.
புதிய திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து லட்டுகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளோம். கடந்த சில வருடங்களில் லட்டுகளின் தரம் குறைந்ததாக பக்தர்களிடம் கருத்துகளைப் கேட்ட பிறகும், லட்டு தயாரிக்கும் தொழிலாளர்களிடம் கலந்துரையாடிய பிறகும் தெரியவந்தது.
முதன்முறையாக கலப்படப் பரிசோதனைக்காக வெளியில் உள்ள ஆய்வகத்திற்கு நெய் பொருட்களை அனுப்பினோம். 5 நெய் சப்ளையர்கள் இருந்தனர். நல்ல தரமான நெய்யை உறுதி செய்ய புதிய நிர்வாகத்தால் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல்லையெனில் மாதிரிகள் கலப்படத்திற்கான சோதனைக்காக வெளிப்புற ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும் என கூறி இருந்தோம். எச்சரித்த பிறகும், ஏ.ஆர்.புட்ஸ் நிறுவனம் அனுப்பிய 4 நெய் டேங்கர்கள் தரமற்றவை என முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. பன்றிக்கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தரமில்லாததற்குக் காரணம் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமாக ஆய்வகம் இல்லை. இந்த குறைபாடுகளை சப்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டனர். NDDB நெய் கலப்பட பரிசோதனை கருவிகளை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக வரும் டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் ரூ.75 லட்சம் மதிப்பிலான புதிய ஆய்வுக்கூடம் நிறுவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.