1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி..!

1

‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2023’ மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும், பொதுப்பிரிவினருக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 8 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மண்டல அளவிலான போட்டிகளும்  நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ‘முதலமைச்சர் கோப்பை - 2023’ மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 01-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 38 மாவட்டங்களைச் சேர்ந்த 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டிகள் ஜூலை மாதம் 25-ந்தேதி வரை நடைபெறுகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அணிகள் பங்கேற்க உள்ளன. பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் கல்லூரி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் விளையாடுகின்றன. இந்த போட்டிகளைக் காண வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like