சைபர் மோசடி கும்பல்கள் மக்களின் ஆசையை தூண்டி, அவர்களை நம்பவைத்து, பணத்தை சுருட்டிக்கொள்கின்றனர். இப்படி பட்ட சைபர் மோசடிகள் தற்போது அதிகரித்து வருவதாக கோவை மாவட்ட இணையதள குற்றப் பிரிவினர் எச்சரிக்கின்றனர்.
தற்போது இன்டர்நெட் மூலம் இயங்கும் மொபைல் ஆப் (செயலிகள்), மற்றும் இனையதளத்தை பிரதானமாக கொண்டு நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரக்கூடிய உள்ளது. 2025 ஜனவரி முதல் ஜூலை வரை கோவை மாவட்டத்தில் சைபர் மோசடிகளால் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ரூ.93 லட்சம் பணம் முடக்கப்பட்டு, அதில் ரூ.68.61 லட்சம் (ரூ.68,61,356) மீட்கப்பட்டு, பணத்தை இழந்தவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. 20 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் உள்ளது.
சென்ற ஆண்டு மக்கள் இழந்த ரூ.2.26 கோடி முடக்கப்பட்டுள்ளது. 150 வழக்குகள் பதியப்பட்டு அதில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளை கணக்கில் கொண்டால், மக்களிடம் திருடப்பட்ட ரூ.5.22 கோடி முடக்கப்பட்டுள்ளது, மோசடியில் ஈடுபட்ட 56 பேர் கைதாகி உள்ளனர் என தெரியவருகிறது.
பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் தங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலமோ, வாட்ஸ்அப் மூலமாக மொபைல் ஆப் லிங்க் மற்றும் ஆப்-க்கான ஃபயிலை இன்ஸ்டால் செய்யவேண்டாம். மொபைல் உடன் வரும் அங்கீகரிக்கப்பட்ட பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து மட்டும் செயலிகளை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
யூடியூப் வீடியோக்களில் "நான் இந்த கார்-ர, தங்க செயின இந்த ஆன்லைன் கேம் விளையாடி ஜெயிச்சேன். நீங்களும் இந்த லிங்க்-க தொட்டு, விளையாடுங்க, பரிசுகளை வெல்லுங்க" என்று சொல்லும் நபர்களை நம்பி எந்த மொபைல் ஆப்-பையும் போனில் சேர்க்கவேண்டாம். அது பெரும்பாலும் 'பெட்டிங்' எனும் சூதாட்டமாக இருக்கலாம்.
அதே போல திடீரென ஒரு அழைப்பில் "உங்கள் பெயர் கொண்ட பார்சலில் போதை பொருள் வைக்கப்பட்டு வந்துள்ளது. உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம். கைது செய்யாமல் இருக்க உடனடியாக அபராதத்தை கட்டவேண்டும், மேலும் ஆதார் என் உள்ளிட்ட தகவல் எல்லாம் கொடுங்கள்" என அழைப்பு வந்தால், பதட்டப்படாமல் 1930 என்ற சைபர் புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள். இந்த வகை குற்றம் அதிகரிக்கிறது. எனவே கவனத்துடன் செயல்படுங்கள் மக்களே.