தொடரும் வங்கி அராஜகங்கள்..! ஒரு இஎம்ஐ கட்டல... அதுக்காக ஒரு பெண்ணிடம் இவ்வளவு ஆபாசமாக பேசுவதா ?
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. இவர் பிரபல ஷோரூமில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் லோன் மூலம் வீட்டிற்கு ஏ.சி வாங்கியுள்ளார்.தவணையில் நிபந்தனையின் கீழே அந்த பொருள் வாங்கப்பட்ட நிலையில் 8 தவணைகளில், 6 தவணைக்கான பணத்தை ஆர்த்தி திருப்பிச் செலுத்தியதாக கூறப்படுகிறது. அடுத்த தவணை பணத்தைக் கட்ட 5 நாட்கள் தாமதமானதால் வங்கி ஊழியர் ஆர்த்திக்கு போன் செய்து ஆபாசமாக திட்டியிருக்கிறார். இது குறித்து வங்கிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல் நேற்று சேலம் வாழப்பாடியில் அமைந்துள்ள IDFC வங்கியில் கூலித் தொழிலாளி ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார். இந்த கடன் தொகையின் தவணையை வங்கி ஊழியர்கள் வசூல் செய்ய வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு தொழிலாளி இல்லாத நிலையில் அவரது மனைவியை அழைத்துச் சென்று கெடு விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த கூலித் தொழிலாளி ரூ.770 தவணையை செலுத்திய பின்னரே அவரது மனைவியை ஊழியர்கள் விடுவித்துள்ளனர். இந்த அடாவடி செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளி தனது மனைவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.