ஷேக் ஹசீனா ராஜினாமாவைத் தொடர்ந்து வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு..!
ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பற்றி எரிய ஆரம்பித்தது வங்கதேசம். வங்கதேச விடுதலைக்காக கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் பங்கேற்ற முன்னாள் வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி இருந்தார் அவாமி லீக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ஷேக் ஹஸீனா. இந்தச் சட்டம் தான் ஒட்டுமொத்த வங்கதேசமும் கொந்தளிக்க காரணமாக அமைந்தது.
சுதந்திர போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில்தான், டாக்கா அரண்மைனையில் இருந்து நேற்று ஷேக் ஹஸீனா வெளியேறி இருந்தார். தொடர்ந்து அவர் இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் குடியேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஷேக் ஹஸீனா வெளியேறியதால், வங்கதேசத்தில் நேற்றிலிருந்தே ராணுவம் ஆட்சிப் பொறுப்பை தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இடைக்காலமாக அரசு அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஓய்வு பெற்ற நீதிபதிகள் சமூக சேவகர்கள் கூடிய அரசு அமைய வேண்டும் என்ற முயற்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இதற்கிடையே சிறையில் உள்ள எதிர்க்கட்சியினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களையும் சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அரசு அமைந்து சட்டம் ஒழுங்கு சீரானதும், எப்போது தேர்தல் நடத்தலாம் என்பதை ஆலோசித்து புதிதாக எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.