வங்கதேச கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு...!
வங்கதேச அரசு கொண்டு வந்த விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30% இட ஒதுக்கீட்டுச் சட்டம் சுமார் 300க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் என்பது ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் அழுத்தம் கொடுத்தனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் ஏற்பட்ட மோதலில் கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைநகர் டாக்கா உட்பட நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. சிராஜ்கஞ்ச் காவல் நிலையத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், 14 போலீசாரை படுகொலை செய்தனர். டாக்காவில் 2 முன்னணி செய்தி நாளிதழ்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வங்கதேச தந்தை முஜிபுர் ரகுமானின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது. கலவரம் அதிகரித்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தனது குடும்பத்தினருடன் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டதாக கூறியுள்ள ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், வங்கதேசத்தின் முழு பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனிடையே, நேற்று டாக்காவில் ஷேக் ஹசீனாவின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல், அங்கிருந்த விலை உயர்ந்தகலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள், மீன்கள் ஆகியவற்றை சூறையாடின. இதுதொடர்பான வீடியோக்களும் வலைதளங்களில் பரவி வருகின்றன.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசாவின் (Mashrafe Mortaza) வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் நரைல் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
மஷ்ரஃப் மோர்டாசா ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் எம்.பி.,யாக இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அரசால் கைது செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பாக மோர்டாசா தொடர்ந்து அமைதி காத்து வந்தார். மோர்டாசா இதுகுறித்து அமைதி காத்து வந்ததால் ஆத்திரமடைந்த மாணவ அமைப்பினர், சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் அவரது வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
மஷ்ரஃப் மோர்டாசா வங்கதேச அணிக்காக 54 டி20ஐ, 220 ஓடிஐ, 36 டெஸ்ட் என 310 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 117 போட்டிகளில் அவர் கேப்டனாகவும் செயல்பட்டார்.