ஒய்வை அறிவித்தார் பங்களாதேஷ் கேப்டன்..!! கண்ணீர் மல்க விளக்கம்..!
ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகாலமாக நடைபெற உள்ளது. அதற்காக உலகின் அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வரும் நிலையில் அண்டை நாடான வங்கதேசம் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
ஜூலை 5ஆம் தேதியான நேற்று துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் வங்கதேசத்தின் கேப்டனாக இருக்கும் நட்சத்திர வீரர்கள் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நேற்று வங்கதேசம் தோல்வியை தழுவி இருந்தது. இந்த நிலையில், ஓய்வு பெறுவதாக தமிம் அறிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் தனது 16 ஆண்டு கால கிரிக்கெட் கரியருக்கு அவர் விடைகொடுத்துள்ளார். அவரது இந்த திடீர் அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
“இதுதான் எனக்கான முடிவு. நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக முயற்சியும் செய்தேன். இந்தத் தருணத்தில் இருந்து நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்தப் பயணத்தில் என் மீது நம்பிக்கை வைத்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள், வங்கதேச கிரிக்கெட் வாரியம், எனது குடும்பத்தினர் என அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எனது ஊக்கம். என் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறேன். அதற்கு உங்கள் பிரார்த்தனைகள் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.