இனி அரளி பூக்களை கோயில் பூஜைகளில் பயன்படுத்த தடை..!

கேரளாவின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் அரளி பூக்களை (ஒலியாண்டர்) பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அரளி பூக்களை பூஜைக்கு பயன்படுத்த தடை இல்லை என்றும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததை செல்போனில் உறவினருக்கு தெரிவித்து கொண்டிருந்தபோது, அரளி பூவை தெரியாமல் சாப்பிட்டு மரணம் அடைந்த சம்பவம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து பத்தனம்திட்டா மாவட்டத்தில் அரளி செடியை தற்செயலாக தின்ற ஒரு பசுவும் அதன் கன்றும் இறந்து போனது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில் திருவிதாங்கூருக்குள்பட்ட அனைத்து கோயில்களிலும் அரளி பூக்களை தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, பக்தர்கள் துளசி, இட்லி பூ, ரோஜா பூக்களை நெய்வேத்தியம் மற்றும் பிரசாதத்துக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
கோயில் பூஜைகளில் அரளிப் பூக்களைப் பயன்படுத்தலாமே தவிர பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படாது. மலபார் தேவசம் போர்டுக்கு உள்பட்ட கோயில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அரளிப்பூவுக்கு தடை செய்யப்படுகிறது. இந்த அரளிப் பூக்கள் பிங்க், வெள்ளை, மஞ்சள் நிறத்தில் உள்ளன.
வாஸ்து சாஸ்திரத்தில் அரளி பூக்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அரளி மலர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியும், பல நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதனால் அரளி செடி விஷமாக கருதப்பட்டாலும் வாஸ்துபடி அதன் பூக்களால் மிகவும் புனிதமானது என கருதப்படுகிறது.