இன்று முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை..!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கருவறையில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவா் சிலை, தங்கக் கோபுரம், தங்கத் தோ், தங்க மயில் ஆகியவற்றை திருவிழாக் காலங்களில் சிலா் கைப்பேசியில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். மலைக் கோயிலில் புகைப்படம் பிடிக்கக் கூடாது என பல இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தாலும் பக்தா்கள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், அண்மையில் பலரும் மூலவரைப் படமெடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் முருக பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியது.
இதையடுத்து, அக்டோபா் 1-ம் தேதி முதல் பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கைப்பேசி, புகைப்பட கருவிகளைக் கொண்டு வர திருக்கோயில் நிா்வாகம் தடைவிதித்து அறிவிப்பு வெளியிட்டது.
கைப்பேசி, புகைப்படக் கருவிகளைக் கொண்டு வரும் பக்தா்கள் படிவழிப் பாதை, வின்ச் நிலையம், ரோப்காா் நிலையங்களில் இதற்கென அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் ஒரு கைப்பேசிக்கு ரூ. 5 கட்டணம் செலுத்தி, ஒப்படைத்து விட்டு செல்லவும், தரிசனம் முடிந்த பின்னா் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த தடை உத்தரவு பழனி மலை முருகன் கோயிலில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.