ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை..!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., எனப்படும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் 120.90 அடியாக உள்ளது. நீர் இருப்பு 44.194 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 33,000 கனஅடியாக உள்ளது.
கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் திறந்து விடப்படுகிறது.
இதனால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. 24,000 கனஅடியாக இருந்த நிர்வரத்து 32,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. எனவே, சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.