1. Home
  2. தமிழ்நாடு

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 16-வது நாளாக தடை..!

1

கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.

இதைத் தொடர்ந்து கடந்த 29-ம் தேதி காலை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானதால் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மேலும் அதிகரித்து வினாடிக்கு 2 லட்சத்து 37 ஆயிரம் கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த 5 தினங்களாக தொடர்ந்து நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நீரானது நேற்று முன்தினம் காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இந்த நீர்வரத்தானது நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி சற்று அதிகரித்து வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக வந்தது. இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து 98 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.இதன் காரணமாக இந்த இரண்டு அணைகளில் இருந்தும் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பிலிக்குண்டுலு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

நேற்று 5-வது நாளாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நாகர்கோவில், முதலை பண்ணை, பென்னாகரத்தில் உள்ள நாகமரை, ஏரியூர் ஆகிய காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அதிகாரிகள் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் 16-வது நாளாக தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Trending News

Latest News

You May Like