ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை..!
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு காவிரி ஆற்றில் இரண்டு அணைகளிலும் ஒரு லட்சம் கன அடி முதல் ஒன்றரை லட்சம் கன அடி வரை தண்ணீரை காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.
இதில் கர்நாடக அணைகளில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட காவிரி நீர், இன்று நண்பகல் கொள்ளேகால் பகுதியைக் கடந்து தமிழக எல்லையை நோக்கி வேகமாக கடந்து வருகிறது. ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காலை 11.30 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 78,000 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், இந்த நீர்வரத்து அதிகரிப்பதால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி கரையோரம் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 11வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.