தமிழ் ராக்கர்ஸில் வெளியானது பாலாவின் வர்மா! திரையுலகினர் அதிர்ச்சி!

நாடு முழுவதும் கொரோனாவால் அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழ் உள்பட பல மொழிப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து உருவாக்கப்பட்டுள்ள வர்மா இன்று ஒடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படமே தமிழில் வர்மா என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் துருவ் விக்ரம், மேகா செளத்ரி, ரைசா வில்சன், ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிக்க டீசர் வெளியாகி ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில் தயாரிப்பு தரப்பு பின் வாங்கியது.
இந்நிலையில் தற்போது பாலாவின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட வர்மா படத்தை ஒடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்தார். ஒடிடியில் இன்று வர்மா படம் வெளியிடப்பட்டுள்ளது. ஒடிடியில் இந்தப்படத்தைக் காண ரூ 140 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிடியில் ‘வர்மா’ படம் வெளியான அதே நேரத்தில் தமிழ் ராக்கர்ஸிலும் ‘வர்மா’ படம் வெளியானது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரூ.140 கொடுத்து ஒடிடி தளத்தில் பார்ப்பார்களா, இலவசமாக தமிழ் ராக்கர்ஸில் பார்ப்பார்களா என்று திரையுலகினர் தமிழ் ராக்கர்ஸ் குறித்து கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த படம் தனக்கு திருப்தியில்லை என்று தான் நடிகர் விக்ரம் கோபித்துக் கொண்டு, மகனுக்காக மீண்டும் ‘வர்மா’ படத்தை வேறொரு இயக்குநர் வைத்து படபிடிப்பு நடத்தி ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.