ஜாமீன் வந்தாச்சு..! இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..!

கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை அவரை அதிரடியாக கைது செய்தது. காவலில் எடுத்து மதுபான முறைகேடு குறித்து விசாரணை நடத்தியது. ஆனால். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. அதே சமயம் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகவில்லை. மாறாக சிறையில் இருந்தபடியே ஆட்சி புரிவார் என்று ஆம் ஆத்மி அறிவித்தது.
மக்களவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள ஏதுவாக ஜூன் 1ஆம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் மே மாதம் 10ஆம் தேதி உத்தரவிட்டது. ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால் மக்களவைத் தேர்தலில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். கடைசி நேரத்தில் உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்ற கெஜ்ரிவால் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து, திகார் சிறைக்கு சென்று மீண்டும் சரண் அடைந்தார்.
இந்த சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுமுறைக் கால நீதிபதி நியாய பிந்து, ஒரு லட்சம் ரூபாய் பிணைத் தொகையாக செலுத்த வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்த உத்தரவை 48 மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார். இதன்மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.