1. Home
  2. தமிழ்நாடு

பகீர் தகவல்..!தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.15.05 லட்சம் கோடியாக உயரும்..!

Q

பா.ம.க.வின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.
அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கக்கூடும்.
2.நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் தமிழகத்தின் வரி வருவாய் ரூ.1,23,970.01 கோடியாக அதிகரித்திருப்பதால், நடப்பாண்டில் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்த மொத்த வருவாய் வரவு இலக்குகளை கிட்டத்தட்ட எட்டிவிட முடியும்.
3.மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்திருப்பதால், அதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பங்கு ரூ.49,754.95 கோடி என்ற இலக்கையும் தாண்டி ரூ.52,491 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழக அரசின் வருவாய் எந்த வகையிலும் குறையாது.
5.அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது, போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் மானியம் ஆகியவற்றால் அரசின் செலவுகள் ரூ.7000 கோடி வரை உயரும்.
6.2024-25ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான ரூ.49,278.73 கோடியை விட அதிகரிக்கக்கூடும்.
7.2025-26ஆம் ஆண்டில் ரூ.1218.08 கோடி வருவாய் உபரி எட்டப்படும் என்று திமுக அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
8.தமிழ்நாட்டில் தொடர்ந்து 13&ஆம் ஆண்டாக 2025-26ஆம் ஆண்டிலும் வருவாய்ப் பற்றாக்குறை நீடிக்கும். அந்த ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.50,000 கோடிக்கும் கூடுதலாக இருக்கும்.
9.2026-27ஆம் ஆண்டில் ரூ.5966.67 கோடி வருவாய் உபரி இலக்கையும் எட்ட முடியாது.
10.2025-26ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.1.20 லட்சம் கோடியை எட்ட வாய்ப்புள்ளது.
11.2024-25ஆம் ஆண்டில் தமிழக அரசு வாங்கும் மொத்தக் கடன் அளவு ரூ.1,55,584.48 கோடியாகவும், நிகரக் கடன் அளவு ரூ.1,05,945.66 கோடியாகவும் இருக்கும்.
12.2024-25ஆம் ஆண்டில் தமிழக அரசு அதன் கடனில் ரூ.49,638 கோடியை திருப்பிச் செலுத்தும்.
13.2025-26ஆம் ஆண்டில் தமிழக அரசு வாங்கும் மொத்தக் கடன் அளவு ரூ.1.65 லட்சம் கோடியாக இருக்கும்.
14.2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அதன் கடனுக்கான வட்டியாக மட்டும் குறைந்தது ரூ.75,000 கோடியாக அதிகரித்திருக்கும்.
15.31.03.2026ஆம் நாள் நிலவரப்படி தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.9.55 லட்சம் கோடியாக இருக்கும்.
16.தமிழக அரசின் நேரடிக் கடனில் ரூ.7.90 லட்சம் கோடி மாநில வளர்ச்சிக் கடன் என்ற பெயரில் பத்திரங்களை வெளியிட்டு பெறப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.1.65 லட்சம் கோடி பிற ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட கடனாகவும் இருக்கும்.
17.தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் தவிர மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் வாங்கப்பட்ட கடனின் அளவு ரூ.5.50 லட்சம் கோடியாக உயரக்கூடும்.
18.தமிழகத்தின் மொத்தக் கடன் 2025-26ஆம் ஆண்டின் முடிவில் ரூ. 15.05 லட்சம் கோடியாக இருக்கும்.
19.தமிழ்நாட்டின் மக்கள்தொகை இப்போது 7.73 கோடியாக இருக்கும் என்று வைத்துக் கொண்டால், ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1,94,695 கடன் பெறப்பட்டிருக்கும். ஒரு குடும்பத்தில் 4 பேர் இருப்பதாக வைத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.7.78 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும்.
20.தமிழக அரசின் நேரடிக் கடன், பொதுத்துறைக் கடன் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.15.05 லட்சம் கோடி எனக் கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான வட்டியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 21,750 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.
21.தமிழ்நாடு ஓராண்டில் செலுத்தும் வட்டித் தொகையைக் கொண்டு தமிழகத்திற்கு தேவையான நீர்ப்பாசனத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி விட முடியும் அல்லது 200 மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட முடியும்.
22.தமிழக அரசின் கடன் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இனி வரும் காலங்களில் வளர்ச்சிக்காக செலவிடப்படுவதற்கு நிதி இல்லாமல் போகலாம். அரசின் பெரும்பகுதி வருவாய் கடனுக்கான வட்டியைச் செலுத்தவே செலவாகும்.
23.தமிழகத்தின் நிதிநிலையை சீரமைக்க கடனை குறைத்தல், வரியில்லாத வருவாயை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வ திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
2030-&ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரம் சாத்தியமில்லை
24.2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 12 முதல் 14% ஆக இருக்கும். 2025-26ஆம் ஆண்டில் அதே அளவு பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை. ஆனாலும், தமிழகத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடையும்.
25.தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்துறை உதவி செய்யும்.
26.2025-26ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ.36.56 லட்சம் கோடியாக இருக்கும் என்று தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை எட்ட வேண்டுமானால் 2025&26ஆம் ஆண்டில் 15.90% பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும். ஆனால், அதற்கு சாத்தியமில்லை.
27.அதேபோல், 2030-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர், அதாவது ரூ.88 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சாத்தியமல்ல. அதிகபட்சமாக ரூ.56 லட்சம் கோடியை எட்டலாம்.
28.தமிழக அரசின் அனைத்துத் துறைகளுக்குமான நிர்வாகச் செலவுகள் 15% குறைக்கப்படும்.
29.தமிழ்நாட்டிற்குள் முதலமைச்சர் தவிர்த்த பிற அமைச்சர்கள் விமானப் பயணம் மேற்கொள்வது தடை செய்யப்படுகிறது.
30.அமைச்சர்கள், அதிகாரிகள், அரசுத் துறைகள் ஆகியவற்றுக்கு புதிய மகிழுந்துகள் வாங்க தடை விதிக்கப்படுகிறது.
31.அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆடம்பர விடுதிகளில் தங்க தடை விதிக்கப்படுகிறது. அவர்கள் அரசு விருந்தினர் மாளிகைகளில் மட்டுமே தங்கவேண்டும்.
32.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான ஊதியத்தில் ஆலோசகர்கள் என்ற பெயரில் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் அரசுக்கு எந்த பயனும் இல்லை என்பதால், அரசுக்கு தேவையற்ற செலவை ஏற்படுத்தும் அந்த நியமனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
33.குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை கையாள்வதற்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் எந்தவித இழப்பீடும் இல்லாமல் இரத்து செய்யப்படும். அப்பணிகளை அரசுத் துறைகளே மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும்.
34.தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2029-30ஆம் ஆண்டிற்குள் ரூ.62.5 லட்சம் கோடியாக உயர்த்த திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 14% இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
35.மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கை 50% ஆக உயர்த்தும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
36.மத்திய அரசு வசூலிக்கும் மேல்வரி, கூடுதல் தீர்வை ஆகியவற்றை அடிப்படை வரிகளுடன் இணைக்க வேண்டும். மாநிலங்களின் வருவாய்ப் பங்கை அதிகரிக்கும் நோக்குடன் மேற்குறிப்பிட்ட சீர்திருத்தங்களை செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
37.மாநில அரசு நிதி வலிமையைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமானால், வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அதன் மூலம் தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தேவையான திட்டங்களை தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக செயல்படுத்த முடியும்." இவ்வாறு பாமக உத்தேச பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like