பலித்தது பாபா வங்காவின் கணிப்பு..!
பார்வை திறனை இழந்த பாபா வங்காவுக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் உலகின் பல முக்கிய நிகழ்வுகளை பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல், சோவியத் யூனியன் வீழ்ச்சி, பிரிட்டன் மகாராணி மரணம் என பாபா வங்காவின் பல்வேறு கணிப்புகள் பலித்துள்ளன. இதனால் பாபா வங்காவின் கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் இதுதொடர்பான பாபா வங்காவின் கணிப்பு பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றது அரசியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. "பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்" என்று பிரபலமாக அறியப்படும் பாபா வங்கா, உலகின் இரண்டு முக்கிய தலைவர்களான விளாடிமிர் புடின் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கணித்திருந்தார்.
குறிப்பாக டொனால்ட் டிரம்ப் குறித்த பாபா வங்காவின் கணிப்புகள் துல்லியமாக இருப்பதாக நடந்த சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த ஜூலை 13 ஆம் தேதி பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 20 வயது இளைஞர் ஒருவர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் டிரம்பின் காது பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து சீக்ரெட் போலீசார், டொனால்ட் டிரம்ப்பை சுற்றி வளைத்து பத்திரமாக அழைத்து சென்றனர். அப்போது சண்டை, சண்டை என கத்தியப்படியே வெளியேறினார் டிரம்ப். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவமும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பாபா வங்கா கணித்தது போலவே டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது தற்போது பேசு பொருளாகியுள்ளது. தற்போதும் 2025 ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை வீழ்ச்சி தொடங்கும் என்றும் 5079 ஆம் ஆண்டு உலகம் அழியும் என்றும் கணித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் குறித்த பாபா வங்காவின் கணிப்புகள் பலித்துள்ள நிலையில் பாபா வங்காவின் எதிர்கால கணிப்புகளும் பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இருப்பினும் பாபா வங்காவின் சில கணிப்புகள் பொய்யாகியுள்ளது. 2016ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா அழிந்துவிடும் என்றும் 2010 முதல் 2014க்குள் அணு ஆயுத போர் நடக்கும் என்றும் பாபா வங்கா கணித்திருந்தார். ஆனால் அவரது அந்த கணிப்புகள் பலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.