1. Home
  2. தமிழ்நாடு

அசத்தல் அறிவிப்பு..! ஸ்டாலினை ஃபாலோ பண்ணும் சந்திரபாபு நாயுடு..!

1

தமிழக அரசின் திட்டங்களை கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் ஆந்திர அரசு பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
 

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமைச்சரவை 3 அமைச்சர்கள் கொண்ட துணைக்குழு அமைத்துள்ளது. இந்தக் குழு மற்ற மாநிலங்களில் இலவச பேருந்து பயணத்தை அமல்படுத்துவது குறித்தும், அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை குறித்தும் ஆய்வு செய்யும் என கூறப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஏற்கனவே சில முதற்கட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நாள்தோறும் எத்தனை பேருந்துகள் இயக்கப்படும்? எவ்வளவு செலவாகும்? எத்தனை பேர் பயணிப்பார்கள் என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஆந்திர அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தினால், நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 லட்சம் பயணிகள் இதனை பயன்படுத்துவார்கள் என கூறப்படுகிறது.


மாநிலத்தில் தற்போதுள்ள பேருந்துகளுடன் சேர்த்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் எனவும் இப்போதுள்ள ஊழியர்களுடன் சேர்த்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற வேண்டியிருக்கும் எனவும் தெரியவந்துள்ளது. ஆர்டிசி பஸ்களில் தினமும் சராசரியாக 27 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ஏசி சேவைகள், சூப்பர் சொகுசு மற்றும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் தினமும் சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

அதாவது மீதி 24 லட்சம் பேர் எக்ஸ்பிரஸ், பல்லே வெலுகு, அல்ட்ரா பல்லே வெலுகு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் சாதாரண மற்றும் மெட்ரோ சேவைகளை பயன்படுத்துகிறார்கள். தினமும் 100 சதவீதம் பேர் பேருந்து பயணத்தை மேற்கொண்டால் அவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்களாகவும், 40 சதவீதம் பேர் பெண்களாகவும் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டால், மாநிலத்தில் பெண் பயணிகளின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆர்டிசி பஸ்களின் ஆக்கிரமிப்பு 68 சதவீதம் முதல் 69 சதவீதம் வரை இருக்கும் என்றும் இதன் அடிப்படையில், 5 வகையான சேவைகளுடன், கூடுதலாக 2,000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆர்டிசி டிரைவர்கள் பற்றாக்குறையால், இலவச பஸ் திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பேருந்துகளுக்கு 5,000 டிரைவர்கள், 5,000 கண்டக்டர்கள், 1,500 மெக்கானிக்குகள் பணியமர்த்த வேண்டிய தேவை ஏற்படும். அதாவது RTC மொத்தம் 11,500 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆர்டிசிக்கு டிக்கெட் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.16 கோடி முதல் ரூ.17 கோடி வரை வருமானம் கிடைக்கிறது.
 

இதில் பெண் பயணிகளிடம் இருந்து ரூ.6 முதல் 7 கோடி வரை வருகிறது. இப்போது இலவச பேருந்து திட்டத்தை அமல்படுத்தினால் பெண் பயணிகளின் மூலம் வரும் வருமானம் கிடைக்காது. இதனால் இலவச பேருந்து திட்டத்தை அரசு செயல்படுத்தினால், ஆர்டிசிக்கு மாதம் ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like