அசத்தல் அறிவிப்பு..! இனி பஸ் டிக்கெட் புக்கிங் 90 நாட்கள் முன்பே செய்யலாம்..!
தமிழகத்தில் தொலை தூர நகரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் ரயில்களில் டிக்கெட் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. தட்கல் முன்பதிவிலும் கூட கண்ணை மூடி திறப்பதற்குள் டிக்கெட்டுகள் காலியாகி விடுகின்றன.
இதனால், பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டு வருகிறார்கள். தனியார் ஆம்னி பேருந்துகளில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விமான டிக்கெட்டிற்கு நிகரான கட்டணம் என சொல்லும் அளவுக்கு கட்டணம் அதிகப்படியாக வசூலிக்கப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் ஆம்னி பஸ்களில் செல்லவே ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டியதாக உள்ளது.
இதனால், அரசு விரைவு பேருந்துகளையே பயணிகள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் நலன் கருதி கூடுதல் அரசு விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தற்போது வார நாட்களிலும் பயணிகள் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக புக்கிங் செய்து செல்லும் பயணிகளுக்கு மாதம் தோறும் குலுக்கல் முறையில் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று முதல் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் இந்த வசதி அமலுக்கு வரும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 60 நாட்கள் வரையில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.