நூதன விழிப்புணர்வு : வாகன ஓட்டிகளுக்கு ஜூஸ், ஐஸ்கிரீம் வழங்கி விழிப்புணர்வு..!

தஞ்சை அண்ணா சிலை ஆர்எம்எச் சாலையில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதே நேரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களையும் காவலர்கள் நிறுத்தினர். இதனால் குழப்பமடைந்த வாகன ஓட்டிகள், '' தயக்கத்துடன் எங்களை ஏன் சார் நிறுத்துறீங்க?'' என கேட்க, சிரித்த முகத்துடன் காவலர்கள் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களையும், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களையும் வரிசையாக நிற்க வைத்தனர்.
அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் , '' சாலை விதிகளை மதிக்காமல் இருந்தால் கேஸ் போடுவோம்.. கடும் வெயிலாக இருந்தால் தவித்த வாய்க்கு ஜூஸ் கொடுப்போம்... சட்டத்தை மீறும் போது வழக்கு போடுவோம்... சட்டத்தை மதிக்கும் போது வாழ்த்தவும் செய்வோம். காவல் துறை உங்கள் நண்பன்... காலம், நேரம் பார்க்காமல் உங்களை காவல் காப்பது நாங்க தாங்க... மண்ணிலே ஈரம் உண்டு, காக்கிக்குள்ளே கனிவும் உண்டு...'' என்ற வரிகளை எடுத்துக்கூறினர்.
அதன் பின் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜூஸ் கொடுத்து வாழ்த்திய போலீசார், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு ஐஸ்கிரீம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதில் தஞ்சை மாநகர போக்குவரத்து காவல்துறையினருடன், தனியார் தொண்டு நிறுவனத்தினர் இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 சதவீதம் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற இலக்குடன் போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.