பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு... விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி?
விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடும் வகையில், தீயணைப்புத்துறையின் வழிகாட்டுதல்களைப் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு பள்ளி கல்வித்துறையினர் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு உத்தவிட்டுள்ளனர்.
இதன்படி, செட்டிமண்டபம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு வெடிப்பது எப்படி? தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கும்பகோணம் நிலைய அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையிலான வீரர்கள், அனைவரும் பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்பது , எதிர்பாரத விதமாக தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
மேலும் கோயில்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளைக் கூறியதுடன், அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதற்கிடையே மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.