30 ரூபாய் இழந்த வேதனையில் 30,000 ரூபாயை பறிகொடுத்த ஆட்டோ டிரைவர்..!
கடந்த 3ம் தேதி பெங்களூரு மகடி சாலையில் இருந்தவாறு தனது ஆண் நண்பருடன் வெளியே செல்ல மாணவி ஒருவர் ஓலா ஆப் மூலம் ஆட்டோவை புக் செய்துள்ளார். அதே சமயத்தில், அவரது நண்பனும், தெரியாமல் மற்றொரு ஆட்டோவை புக் செய்து விட்டார். இரு ஆட்டோக்களும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்த நிலையில், மாணவி புக் செய்த முத்துராஜ் என்பவரின் ஆட்டோவை ரத்து செய்துள்ளார்.
பின்னர், மற்றொரு ஆட்டோவில் இருவரும் ஏறி அமர்ந்த நிலையில், சவாரியை ரத்து செய்த ஆத்திரத்தில் முத்துராஜ், அந்த மாணவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவியை டிரைவர் முத்துராஜ் அறைந்துள்ளார். இது அனைத்தையும் மாணவி வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து, டிரைவர் முத்துராஜை 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் முடிவு செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: ஆட்டோ புக்கிங்கை ரத்து செய்ததால், பொறுமை இழந்த டிரைவர் முத்துராஜ் இப்படி நடந்து கொண்டுள்ளார். அநேகமாக, அவர் 4 நாட்கள் நீதிமன்ற காவலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை தயார் செய்யவே நான்கைந்து தினங்கள் கடந்து விடும். ஆட்டோ புக்கிங்கை ரத்து செய்ததால், முத்துராஜுக்கு வெறும் ரூ.20 முதல் ரூ.30 வரையிலேயே செலவாகியிருக்கும். தற்போது, கோபத்தினால் நிகழ்ந்த இந்த சம்பவத்தினால், வக்கீல் செலவு உள்பட ஜாமின் பெறுவதற்கு மட்டும் அவர் ரூ.30,000 வரையில் செலவு செய்ய வேண்டியிருக்கும், எனக் கூறினர்.