மருதமலை செல்வோர் கவனத்திற்கு..! மலைப் பாதையில் வாகனங்களுக்குத் தடை..!

கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தோ் திருவிழா, பிப்ரவரி 4 முதல் 14-ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. அதன்படி, பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றமும், பிப்ரவரி 10-ஆம் தேதி பகல் 12.10 முதல் 12.30 மணி வரை திருக்கல்யாணமும், பிப்ரவரி 11-ஆம் தேதி நண்பகல் 11 மணிக்கு தைப்பூச திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், பிப்ரவரி 12-ஆம் தேதி மாலை 4.30 முதல் 7.30 வரை தெப்பத் திருவிழா நிகழ்ச்சியும், பிப்ரவரி 13-ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
தைப்பூச தோ்த் திருவிழாவுக்கு அதிக அளவிலான பக்தா்கள் வருவதை கருத்தில் கொண்டு பிப்ரவரி 4 முதல் 8 வரை மற்றும் பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதியில்லை. பிப்ரவரி 9 முதல் 12 வரை இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை.
மேற்படி நாள்களில் பக்தா்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்றும் சுவாமி தரிசனம் செய்யலாம். தைப்பூச திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ச.ஜெயக்குமாா், கோயில் துணை ஆணையரும் செயல் அலுவலருமான இரா.செந்தில்குமாா் மற்றும் அறங்காவலா்கள் வி.மகேஷ்குமாா், ப.பிரேம்குமாா், ஆ.கனகராஜன், வி.ஆா்.சுகன்யா ராஜரத்தினம் ஆகியோா் செய்து வருகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.