மக்களே கவனம்..! இனி வரும் புயல்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்..!
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வரும் நாட்களில் உருவாகும் புயல்கள் மிகுந்த வலிமையானதாக இருக்கும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் சென்னை பள்ளிக்கரணையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மரைன் ஹீட் வேவ் அதாவது கடல் வெப்ப அலைகள் காரணமாக புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும் என தெரிவித்தார். வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரித்துள்ளதாகவும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் மேகங்களின் பரப்பளவு குறைந்து அதிக நீரைக் கொண்ட மேகங்கள் உருவாவதாகவும் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால்தான் குறிப்பிட்ட இடத்தில் அதிக மழை பொழிகிறது புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலை மாதக் கணக்கில் தொடர்வதாகவும் கடற்பகுதியில் உருவாகும் புயல் கடல் வெப்பநிலை பகுதியை கடக்கும் போது வலிமையானதாக மாறுகிறது என்றும் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடல் வெப்ப அலை காரணமாக அதிகப்பட்ச மழை பொழியும் என்றும் அதனை கணிப்பது கடினமாக இருக்கும் என்றும் கடல் வளம் அழியும் ஆபத்து ஏற்படும் என்றும் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்டார்டிகாவில் நீருக்கடியில் ஒரு கிளாடரை அமைக்க உள்ளதாகவும் அதன்மூலம் வெப்ப பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்த ஆய்வு செய்யப்படும் என்றும் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.