மக்களே கவனம்..! இன்று முதல் 2 நாட்கள் பாஸ்போர்ட் இணையதள சேவை செயல்படாது..!
தொழில்நுட்ப பராமரிப்புப் பணி காரணமாக பாஸ்போர்ட் சேவா திட்ட இணையதள சேவையானது வரும் 23-ம் தேதி காலை 6 மணி வரை பயன்பாட்டில் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் விண்ணப்ப பரிசீலனை, அப்பாய்ன்மென்ட் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், “தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக பாஸ்போர்ட் சேவா தளம் செப்டம்பர் 20-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 23-ம் தேதி காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்காது. இந்நாட்களில் அப்பாய்ன்மென்ட் பெற்றிருப்பவர்களுக்கு, வேறொரு தேதி வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தேதிகளில் குடிமக்கள் மட்டுமல்லாது, வெளியுறவு விவகார அதிகாரிகள், குடிவரவு பணியக அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பாஸ்போர்ட் சேவா தளத்தை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பதாரர்கள் முன் அனுமதி மற்றும் விளக்கங்களுக்கு திட்டமிடப்பட்ட பராமரிப்புக்குப் பிறகு இணையதள முகவரி(www.passportindia.gov.in-யை பார்வையிடுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.