மக்களே கவனம்..! வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி தொடங்கும்..!
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும், அக்டோபர் 4-வது வாரத்தில் மழை அளவு அதிகரிக்கும், 3 மாதங்களுக்கு மழை இருக்கும் என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை கேரளா, தமிழகம்,தெற்கு கர்நாடகா, ராயலசீமா, ஆந்திரப் பிரதேசத்தில் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
இதற்கிடையை இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை 7-ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.