பயணிகள் கவனத்திற்கு..! சென்னை எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள்..!

ஜூன் 20 அதாவது இன்று முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை இந்த மாற்றங்கள் இருக்கும்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக, ஐந்து விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. "கொல்லம், மன்னார்குடி, தேஜாஸ், குருவாயூர், திருச்செந்தூர் ஆகிய ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் அல்லது அங்கு வந்து சேரும்" என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 3:15 மணிக்கு தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயில் புறப்படும். அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து காலை 4:25 மணிக்கு ரயில் புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கத்திலும் மின்சார ரயில் நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே அதிகாலை நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தாம்பரம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் சீராக இருந்தாலும், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சில தடங்கல்கள் உள்ளன. கும்மிடிப்பூண்டிக்கும், கவரைப்பேட்டைக்கும் இடையே பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மதியம் 1:15 மணி முதல் மாலை 5:15 மணி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன."15க்கும் மேற்பட்டமின்சார ரயில்மற்றும் மெமு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதில், மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து சூலூர் பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் ரயில்களும் அடங்கும்" என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு இணைப்பு ரயில்களை பிடிக்க வசதியாக, சில மின்சார ரயில் சேவைகளின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.