1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் கவனத்திற்கு..! இனி பொது பெட்டிகளில் பயணிக்க 150 டிக்கெட்கள் மட்டுமே கிடைக்கும்..!

1

இந்திய ரயில்வே பல பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது.இந்நிலையில் தற்போது, ரயில்களில் கூட்டத்தைக் குறைக்க ஒரு புதிய முறையை இந்திய ரயில்வே கண்டறிந்துள்ளது. முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு புதிய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

பொது ரயில் பெட்டிகளில் 75 முதல் 80 இருக்கைகள் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் 400 முதல் 500 பயணிகள் வரை செல்கின்றனர். இதனால் அனைவருக்கும் நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய ரயில்வேயின் புதிய விதிமுறையின் கீழ், முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் இப்போது 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். அதாவது 150 பேருக்கு மட்டுமே பொது டிக்கெட்டுகள் கிடைக்கும்.

இந்தச் சோதனை தற்போது டெல்லி ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக செயல்பட்டால் நாடு முழுவதும் மற்ற ரயில் நிலையங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த சோதனைக்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருளில், அடுத்த மூன்று மணி நேரத்தில் இயங்கும் குறிப்பிட்ட ரயில்களின் டிக்கெட்டுகள் மட்டுமே கணக்கிடப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் நிறையப் பேருக்கு சீட் கிடைக்காது என்றாலும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் டிக்கெட் வழங்குவதற்கான வரம்பு குறித்து இந்திய ரயில்வே தரப்பில் எந்த விதியும் இல்லை. எனவே இந்த பெட்டிகளில் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்கின்றனர். சீட்டுக்காக நிறையப் பிரச்சினைகள் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்றன. பொதுவாக, ஒரு ரயிலில் 75 முதல் 80 இருக்கைகள் கொண்ட ஒரு பெட்டியில், 400 பேர் வரை பயணம் செய்கின்றனர். இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் டிக்கெட் வழங்குவதற்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறையின் கீழ், ரயில்கள் புறப்படும் ரயில் நிலையத்திலிருந்து 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். அதே நேரத்தில், இடையில் வரும் ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளின் மொத்த எண்ணிக்கையில் 20 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காத்திருப்பு டிக்கெட்டுகளுக்கான வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது ரயில் பெட்டிகளில் மட்டுமல்ல, ஸ்லீப்பர் மற்றும் ஏசி ரயில் பெட்டிகளிலும் காத்திருப்பு டிக்கெட்டுகளுக்கு இந்திய ரயில்வே வரம்பு நிர்ணயித்துள்ளது.

புதிய விதியின்படி, ஏசி ரயில் பெட்டிகளில் உள்ள இருக்கைகளில் 60 சதவீதம் வரையிலும், ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளில் 30 சதவீதம் வரையிலும் காத்திருப்பு டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த முயற்சிகள் ரயில்கள் மற்றும் நடைமேடைகளில் கூட்டத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like