பெண் பயணிகள் கவனத்திற்கு..! இனி நீங்கள் ரயிலில் பாதுகாப்பாக செல்லலாம்..!

இந்தியாவில் சாதாரண பயணிகள் ரயில் முதல் வந்தே பாரத் வரையிலான அதிவேக சொகுசு ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன.
ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் இருப்பது வழக்கம். 12 ஸ்லீப்பர் பெட்டிகள் கொண்ட ஒரு ரயில் குறைவான பாதுகாப்பு பணியாளர்களே இருப்பதால் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலை வருகிறது.இதனால் ரயில்களில் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள், பாலியல் அத்துமீறல் நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ரயில்வே பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதாவது அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உள்ளது. இந்த ஆண்டு 11,000க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளில் கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக தயாரிக்கப்படும் அனைத்துப் பெட்டிகளிலும் அவசர பொத்தான்கள் (SOS) பொருத்தப்படும். அவசர காலங்களில் இந்தப் பொத்தானை அழுத்தினால் பாதுகாப்புப் படைக்கு உடனடியாகத் தகவல் அனுப்பப்பட்டு உதவி வழங்கப்படும்.
ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் பெண்கள் பெட்டியில் அமைக்கப்படும் அவசர கால பொத்தான்கள் மொபைல் பயன்பாட்டுடன் இணைக்கப்படும், இதன் மூலம் பெண்கள் அவசர காலங்களில் மொபைல் மூலமாகவும் உதவி கோர முடியும். ரயில்வே 700க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை ரயில்வே உணர்திறன் மிக்க அல்லது மிகவும் உணர்திறன் மிக்க பட்டியலில் வைத்துள்ளது. அங்கு பெண் RPF அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க ஒரு வலுவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 'மெரி சஹேலி' போன்ற முயற்சிகள் பெண் பயணிகளுக்கு நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை அளித்துள்ளன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.