பள்ளி மாணவி கடத்த முயற்சி.. தற்காப்பு கலை தெரிந்ததால் தப்பித்த 6ம் வகுப்பு மாணவி..!
விழுப்புரம் தையூர் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். மாணவி தினமும் வீட்டில் இருந்து சைக்கிளிலேயே பள்ளிக்கு சென்று வருகிறாள். வழக்கம்போல் மாணவி நேற்று காலை தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள்.
அப்போது வழியில் சைக்கிளில் உள்ள சங்கிலி கழன்று விட்டதால் மேற்கொண்டு அவளால் சைக்கிளை ஓட்ட முடியவில்லை. இதனால் சாலையோரமாக சைக்கிளை நிறுத்தி விட்டு சங்கிலியை சரிசெய்து கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்தபடி வந்த 2 மர்ம நபர்கள் மாணவியின் அருகில் வந்து அவளை கடத்த முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டதோடு தன்னிடம் இருந்த சிலம்பாட்ட பயிற்சி குச்சியால் மர்ம நபர்களை விரட்டியடித்துவிட்டு அங்கிருந்து தப்பி அருகே தோட்டத்தில் நின்ற தனது தாய், தந்தையிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதாள். மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
பின்னர் மாணவியிடம் விசாரித்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் ஒரு சாக்கு மூட்டை வைத்திருந்ததாகவும், அதில் ஒரு சிறுமியின் அழுகை சத்தம் கேட்டதாகவும் தொிவித்தாள். இதனால் மர்ம நபர்கள் ஏற்கனவே வேறு ஒரு சிறுமியை கடத்தி யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அவளை சாக்குமூட்டைக்குள் கடத்தி வந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பகுதிமக்கள் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் குற்றப்பிரிவு போலீசாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினா். அதே போல் மாவட்ட கல்வி அலுவலர், மாணவி படித்து வரும் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மாணவி கொடுத்த தகவலின் பேரில் அவளை கடத்த முயன்ற மர்ம நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? அவர்கள் சாக்கு மூட்டையில் வேறு சிறுமியை கடத்தி சென்றார்களா? அந்த பகுதியில் வேறு ஏதேனும் சிறுமி மாயமாகி இருக்கிறாளா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.