காய்கறி நறுக்கும் கத்தியால் ஏடிஎம் இயந்திரத்தை திறக்க முயற்சி.. கொள்ளையனின் அட்டகாசம் !

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ரயில்வே கேட் அருகே இந்தியன் வங்கியின் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 12 ஆம் தேதி வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் பணம் எடுக்க ஏடிஎம்மிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த இரண்டு ஏடிஎம் இயந்திரங்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வங்கி அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து போலீசாருக்கு புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பல அதிர்ச்சியூட்டும் காட்சிகளும் சிரிப்பூட்டும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
அந்த சிசிடிவி காட்சிகள் பதிவில், கடந்த 11 ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏடிஎம்மிற்கு வருகிறார். தலைக்கேறிய போதையில் இருந்த அந்நபர் உள்ளே வந்ததும் ஏடிஎம்மின் சட்டரை இறக்கிவிட்டு சில விநாடிகள் யோசிக்கிறார்.
பின்னர் தான் வைத்திருந்த காய்கறி நறுக்கும் அளவிற்கு உள்ள கத்தியை கொண்டு ஏடிஎம்மின் கதவை உடைக்கிறார். அதற்கு மேல் அந்த இயந்திரத்தை உடைக்கமுடியவில்லை. அந்த முயற்சியை கைவிட்டுவிட்டு அதே அறையில் இருந்த இன்னொரு ஏடிஎம் இயந்திரத்தின் கதவை உடைக்கிறார். அதிலும் பணத்தை எடுக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கு மேலாக விடாமுயற்சியுடன் போராடுகிறார். ஆனால் அவரின் முயற்சி கைகொடுக்கவில்லை. இதனால் தனது முயற்சியில் தோல்வியுற்ற போதை ஆசாமி, கவலையுடன் அங்கிருந்து திரும்பியுள்ளார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தன.
இதையடுத்து சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் அந்த போதை ஆசாமியை ஒரே நாளில் கண்டுபிடித்து கைது செய்தனர். இதனால் ஏடிஎம்மில் இருந்த 15 லட்சம் பணத்திற்கும் எந்த பிரச்னையும் எழவில்லை.
திருட்டில் ஈடுபட்டது சென்னை பல்லவன் சாலை சிவசக்தி நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பதும், ஆவடி ரயில் நிலையத்தில் தினமும் குடித்துவிட்டு தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
newstm.in