திமுகவில் ஐக்கியமாகும் OPS? அமைச்சர் சேகர்பாபு - ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு..!
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலளித்துப் பேசினார். இந்தப் பதிலுரையைப் புறக்கணிக்கும் வகையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவைக்கு வராத நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்ததும், சபாநாயகர் அறைக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சந்தித்து உரையாடினார். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்தத் திடீர் சந்திப்பின்போது, ஓ.பன்னீர்செல்வத்தை தி.மு.க-வில் இணையுமாறு அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த அழைப்பிற்கு ஓ.பி.எஸ் தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வரவிருக்கும் தேர்தலில் தனக்கும், ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோருக்கும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், தனது மகன் ரவீந்திரநாத்திற்கு மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க-வில் இணைந்துள்ள நிலையில், தற்போது ஓ.பி.எஸ் வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தி.மு.க தலைமை பச்சைக்கொடி காட்டும் பட்சத்தில், அவர் அதிகாரப்பூர்வமாக தி.மு.க-வில் ஐக்கியமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.