பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு..!

சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று காலை புகுந்த 50 பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியது. வீட்டுக்குள் மனித கழிவு கலந்த சாக்கடை நீரை ஊற்றி அட்டகாசம் செய்தது.
அந்த கும்பல், வீட்டில் இருந்த சங்கரின் தாயாரையும் மிரட்டி விட்டு சென்றது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் வைரலாக பரவியது. தமிழக அரசுக்கு எதிராகவும் போலீசாருக்கு எதிராகவும் பலரும் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டனர்.
தாக்குதல் சம்பவத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர்தான் காரணம் என்று சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு தமிழக போலீஸ் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர், சென்னை போலீஸ் கமிஷனர் மீதும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மீதும் குற்றம் சாட்டினார்.
கீழ்பாக்கத்தில் தன் வீட்டின் முகவரி போலீசாரை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றும், தன்னுடைய முகவரி தாக்குதல் நடத்திய கும்பலுக்கு கிடைத்ததற்கு சென்னை போலீஸ் காரணம் என்றும் சங்கர் கூறினார்.தாக்குதல் நடத்திய கும்பல் ஊர்வலமாக வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் நினைத்திருந்தால் அப்போதே தடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப் பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது. அவரை காப்பாற்றும் நோக்கத்திலேயே திருவேங்கடம் என்கவுன்டர் நடத்தப்பட்டுள்ளது என்றும் சங்கர் குற்றம் சாட்டினார்.