1. Home
  2. தமிழ்நாடு

புதுப்புது வடிவங்களில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

Q

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அப்பாவி மீனவர்கள்மீது கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று முன்தினம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள புறப்பட்ட தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்ததாகவும், இதன் காரணமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாமல் மீனவர்கள் தாயகம் திரும்பியதாகவும், இலங்கை அரசின் தாக்குதல் காரணமாக ஒரு படகிற்கு 70,000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில், இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றவுடன் புதுவிதமான தாக்குதலை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது தமிழ்நாடு மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்களை விரட்டியடிப்பது, அவர்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து புதுப்புது வடிவங்களில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த நீண்டகாலப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியது மிக மிக அவசியம்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதால், உடனடியாக இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்றும், தமிழக மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பினை இந்திய கப்பற்படையின் மூலம் வழங்க வேண்டுமென்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்வதோடு, மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு தேவையான அழுத்தத்தை தி.மு.க. அரசு அளிக்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like