சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல்..!
சென்னை தியாகராய நகரில் உள்ள தாமஸ் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லம் அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (அக்.27) இரவு 09.00 மணியளவில் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பாட்டில் மற்றும் கற்களால் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும், தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; இந்த சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
“கம்யூனிஸ்ட் கட்சி மீதான வெறுப்பால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். அலுவலகத்திற்கு காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும். அலுவலக பெண் ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.