போடி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவர் கைது !

தேனி மாவட்டம் போடி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் போடி-தேவாரம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அதிகாலை இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி நடந்தது.
இதில் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் ரூபாய் தப்பியது. இதுகுறித்து போடி பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கார்த்திகேயன் (32) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
போடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.பார்த்திபன் அறிவுரையின்பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றது போடி முந்தல் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார் (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போடி தாலுகா காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடித்த போடி டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.