டில்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்..!

டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். ஆட்சி பறிபோனதால், எதிர்க்கட்சி இருக்கைக்கு ஆம்ஆத்மி தள்ளப்பட்டது.
இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக அதிஷியை ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். டில்லி முதல்வர் ரேகா குப்தாவை எதிர்கொள்ள ஒரு வலுவான பெண் தலைமை தேவை. அதற்கு அதிஷி தகுதியானவர் என எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்தை முன்வைத்தனர். கூட்டத்தில் கெஜ்ரிவால் மற்றும் 22 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் அந்தந்த தொகுதிகளில் தோல்வியடைந்ததைக் கருத்தில் கொண்டு, அதிஷி எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தான் டில்லி சட்டசபையில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை பெற்றார்.