இன்று நடக்கவிருந்த உதவி லோகோ பைலட் தேர்வு கடைசி நிமிடத்தில் ரத்து..!

உதவி 'லோகோ பைலட்' பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு, இன்று (மார்ச் 19) நடைபெற இருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, தெலுங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கியதற்கு தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
தேர்வு மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. வேறொரு தேர்வு நடப்பதால் தமிழகத்தில் மையம் ஒதுக்க முடியாது என ரயில்வே தேர்வு வாரியம் கூறியிருந்தது.
இந்நிலையில், இன்று (மார்ச் 19) தொழில்நுட்ப காரணமாக, கடைசி நேரத்தில் ஷிப்ட் முறையில் நடக்க இருந்த 2 தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வு ரத்து செய்யப்படுவதாக மையங்களில் திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
திடீரென ரத்து செய்யப்பட்டதால் தெலுங்கானா சென்ற தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.