ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின் சட்டசபை இன்று கூடுகிறது..!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த மாதம் 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. அன்றைய தினம் பொது பட்ஜெட்டும், மறுநாள், வேளாண் பட்ஜெட்டும் தாக்கலானது. அவற்றின் மீது, கடந்த 17ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை விவாதம் நடந்தது.
துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம், கடந்த மாதம் 24ம் தேதி முதல் நடந்து வருகிறது. தினம், ஒவ்வொரு துறை வாரியாக விவாதம் நடக்கிறது. கடந்த 10ம் தேதி மகாவீரர் ஜெயந்தியையொட்டி, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்து தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததால், 10ம் தேதி முதல் நேற்று வரை, சட்டசபை கூட்டம் நடக்கவில்லை.
ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின், சட்ட சபை மீண்டும் இன்று கூடுகிறது. இன்று, செய்தி மற்றும் விளம்பரம்; எழுதுபொருள் மற்றும் அச்சு; தமிழ் வளர்ச்சி துறை, மனிதவள மேலாண்மை துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பதில் அளித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
பெண்களையும், சைவ, வைணவ சமயங்களையும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை நீக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் இன்று முக்கிய அறிவிப்பை சபையில் வெளியிட உள்ளார்.