கேப்டன் விஜயகாந்துக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்..!

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்த உரையை புறக்கணித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு, ”ஆளுநர் உரைக்கு முன்பு நாட்டுப் பண் பாடவில்லை என்பதும், அரசு தயாரித்த உரையில் உடன்பாடு எட்டவில்லை”, என்பதே உரையை புறக்கணித்ததற்கு காரணமாக கூறினார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வடிவேலு, கு.க.செல்வம், எஸ்.ராஜேந்திரன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அதேபோல் தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, ஒடிஷா முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கட்ராமன், சங்கர நேத்ராலய கண் மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கும் இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
பின்னர் விஜய்காந்த் குறித்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறுகையில், ”கேப்டன் என்றும் புகழ்பெற்றவர். பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு பெற்றவர் விஜயகாந்த். 2006-2016 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் என புகழாரம் பாடினார்.
பின்னர் விஜய்காந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து, இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்விநேரம் தொடங்கியது.