பொருளாதாரம் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவரிடம் கேளுங்க.. மோடிக்கு சிதம்பரம் பதிலடி..!

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மோடி கூறியதாவது:- நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு அளித்து இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக ரயில்வேக்கு 7 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கியுள்ளோம். 2014 க்கு முன்பு இருந்த அரசு ஒதுக்கியதை விட 3 மடங்கு அதிகமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒதுக்கியுள்ளது" என்று பேசினார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2004 - 14 ஆம் ஆண்டு வழங்கிய நிதியை விட 2014 - 2024ல் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர்களும் பிரதமரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக ரயில்வே திட்டங்களுக்கு முன்பை விட 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பொருளாதாரம் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவியிடம் போய் கேளுங்கள். பொருளாதார அளவீடுகள் என்பது முந்தைய ஆண்டை விட வரும் ஆண்டில் எப்போதுமே அதிகமாக இருக்கும் என்பதை அவர் உங்களுக்கு கூறுவார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி என்பது முன்பை விட தற்போது அதிகமாக உள்ளது. மத்திய பட்ஜெட்டின் அளவும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட அதிகமாக இருக்கும். அரசின் மொத்த செலவீனமும் முந்தைய ஆண்டை விட ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக இருக்கும். முந்தைய ஆண்டை விட உங்கள் வயதும் ஒரு ஆண்டு கூடிவிடும். எனவே, 'எண்கள்' அடிப்படையில், பார்த்தால் எண்ணிக்கை பெரியதாக இருக்கும், ஆனால், ஜிடிபி விகிதாச்சாரம் அடிப்படையில் அதிகமாக உள்ளதா? அல்லது மொத்த செலவினத்தின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அதிகமாக உள்ளதா?" என்று ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.