1. Home
  2. தமிழ்நாடு

ஏசி பெட்டியில் பயணித்த 84 பயணிகளுக்கு வாந்தி மயக்கம்.. நடுவழியில் பரபரப்பு!

1

கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சென்னையில் செங்கோட்டை - தாம்பரம் புதிய வாராந்திர அதிவேக ரயில் சேவையை துவங்கி வைத்தார். இந்த ரயில் (20684 ) கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து முதல் சேவையை தொடங்கியது. செங்கோட்டையிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தென்காசி பாவூர்சத்திரம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியாகும்போது ஏப்ரல் மே மாதங்களில் வாரம் ஒரு முறையும், ஜூன் மாதம் முதல் வாரம் 3 முறை ரயிலாகவும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் மாதம் முதல் இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து வாரம் மும்முறை இயக்கப்பட்டு வருகிறது.

Train

இந்த நிலையில் நேற்று மாலை செங்கோட்டையிலிருந்து தாம்பரத்துக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் புறப்படும்போதே எம்-5 ஏசி பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை. இந்த பெட்டியில் 84 பயணிகள் இருந்தனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கூறியபோது அடுத்த ரயில் நிலையத்தில் சரி செய்யப்படும் என கூறியுள்ளனர். அப்படியே அடுத்தடுத்த ரயில் நிலையங்களை ரயில் கடந்து வந்துள்ளது.

இதனிடையே அந்த எம் 5 பெட்டியில் இருந்த ஏசி வேலை செய்யாததால் பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் நள்ளிரவில் அந்த ரயில் அறந்தாங்கி ரயில் நிலையத்துக்கு வந்தபோது பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அப்போது பயணிகள் அதிகாரிகளிடம் ஏசியை உடனே சரி செய்து, அதன் பின்னர் ரயிலை இயக்குங்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Arantangi

அதற்கு அதிகாரிகள் ரயில் பெட்டியில் ஏசி சரி செய்யும் வசதி அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இல்லை. திருவாரூர் ரயில் நிலையத்தில் கண்டிப்பாக ஏசி சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் ரயிலில் ஏறி சென்றனர். இந்த சம்பவத்தால் செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் 1 மணி நேரம் நின்று காலதாமதமாக சென்றது.

Trending News

Latest News

You May Like